வேலாயுதசுவாமி
கூழாவடிச் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் பூசாரியாகவிருந்த வேலாயுதசுவாமி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் நடுக்காட்டில் சிவநகர் குளத்திற்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்து அதற்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.
மூன்று கிராமங்களும் உருத்திரபுரம் மக்களுடன் அவரது கோவிலுக்கு போக தொடங்கினர். வேலாயுதசுவாமியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே அந்த யானைக் காட்டில் தங்கினார்.
உருத்திரபுரீச்சரர்
உருத்திரபுரீச்சரர்
ஒரு நாள் சிவன் வேலாயுதசுவாமியின் கனவில் தோன்றி தாம் அக் காட்டில் ஒரு குகையில் அடைபட்டிருப்பதாக கூறினார். அவரது கனவைத் தொடர்ந்து பக்தர்களும் வேலாயுதசுவாமியுடன் சேர்ந்து அந்த அடர்ந்த வனத்தில் தேடுதல் நடத்தினர்.
செங்கற்களால் மலை போன்று அமைப்பும் அதனடியில் குகை போன்ற அமைப்பும் தென்பட்டன. அப்போது கிளிநொச்சி மாவட்டம் தனியாக பிரியவில்லை. யாழ்ப்பாணத்துடனே இயங்கியது.
பளையிலிருந்த டீ.ஆர்.ஓ(DRO ) முருகேசம்பிள்ளைக்கும் யாழ்ப்பாண (GA ) ஸ்ரீ காந்தாவிற்கும் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வாராய்ச்சி நடந்த போது சோழர் காலத்தைச் சேர்ந்த சிவலிங்கம் தோன்றியது.
அச்சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து உருத்திர புரீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டது. சிவன் கோவிலை சூழயிருந்த காட்டில் மக்கள் குடியேற சிவநகர் கிராமம் உண்டாயிற்று. பழமை வாய்ந்த குளம் புனரமைக்கப்பட்டு சிவநகர் மக்களுக்கான நீர்ப்பாசன குளமாக மாறியது.
இதனை உருத்திரபுரீச்சரர் தல வரலாறாகவோ சிவநகர் கிராமத்தின் வரலாறாகவோ கொள்ளலாகாது. அப்போது சிறுவனாயிருந்த நான் செவிவழி கேள்விப்பட்ட செய்திகளே இவையாகும்.
பின்னர் அமைக்கப்பட்ட அறங்காவல் சபையில் அப்போது மூன்று கிராமங்களுக்கும் உருத்திரபுரத்திற்கும் கிராம விதானையாகவிருந்த எனது தந்தையார் ஒரு சாதாரண உறுப்பினராகவிருந்தார்.
யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண மிஷன் வைதீஸ்வர வித்தியாலயத்தின் புகழ் பெற்ற அதிபர். உயர்திரு. அம்பிகைபாகன் சிறிது காலம் அதன் தலைவராக இருந்தார்.
அதன் காரணமாக எனது சகோதரன், சகோதரியுடன் சாதாரண வன்னிக்கிராமத்தில் பிறந்த நானும் வைதீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாக்கியத்தைப் பெற்றோம்.
இன்று சிவாலய அறங்காவல் சபை மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
நன்றி!
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 6
0 comments:
Post a Comment